×

காஞ்சிபுரத்தில் வரும் 14ம் தேதி முதல் 26ம் தேதி வரை காமாட்சியம்மன் கோயில் நவராத்திரி உற்சவ விழா: 22ம் தேதி சூரசம்ஹாரம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயிலில் 14ம் தேதி முதல் 26ம் தேதி வரை நவராத்திரி உற்சவ விழாவும், 22ம் தேதி சூரசம்ஹாரமும் நடைபெறுகிறது.  மகாசக்தி பீடங்களில் ஒன்றாக காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயில் விளங்குகிறது. இக்கோயிலில், வரும் 14ம் தேதி முதல் 26ம் தேதி வரை நவராத்திரி உற்சவம் விழா நடக்கிறது. அதன்படி, காமாட்சியம்மன் கோயிலில் வரும் 14ம் தேதி காலை பூர்வாங்க சண்டி ஹோமத்துடனும், மாலை வாஸ்து சாந்தியுடனும் நவராத்திரி உற்சவம் விழா தொடங்குகிறது.

இதனையடுத்து, 15ம் தேதி ரக்சாபந்தனம் மற்றும் யாகசாலை பூஜைகள் நடக்கிறது. மேலும், 16ம் தேதி முதல் நவராத்திரி உற்சவத்தையொட்டி, தினந்தோறும் காலையில் நவாவர்ண பூஜைகள், மாலையில் லட்சுமி, சரஸ்வதி தேவியருடன் உற்சவர் காமாட்சியம்மன் சிறப்பு அலங்காரத்தில், அலங்கார மண்டபத்திலிருந்து, நவராத்திரி மண்டபத்துக்கு எழுந்தருள்கிறார். சிறப்பு தீபாரனைகளுக்குப்பின், மீண்டும் அலங்கார மண்டபத்துக்கு எழுந்தருள்கிறார். நவராத்திரியையொட்டி, தொடர்ந்து 9 நாட்களும் தினந்தோறும் சூரசம்ஹாரம் நடைபெறுகிறது.

அதனைத்தொடர்ந்து, அக்.22ம் தேதி உற்சவர் காமாட்சியம்மனும், துர்கையம்மனும் அலங்கார மண்டபத்தில் இருந்து நவராத்திரி மண்டபத்துக்கு எழுந்தருளி, சூரசம்ஹாரம் செய்வதுடன் விழா பூர்த்தியடைகிறது. மறுநாள் 23ம் தேதி சரஸ்வதி பூஜையும், 24ம் தேதி விஜயதசமி சிறப்பு தீபாராதனையும், நவாவர்ண பூஜையும் நடக்கிறது. பின்னர் 25ம் தேதி கலசாபிஷேகமும், 26ம் தேதி இரவு காமாட்சியம்மன் ஊஞ்சல் உற்சவத்தோடு, நவராத்திரி உற்சவம் நிறைவு பெறுகிறது.

நவராத்திரி விழாயொட்டி, தினசரி தஞ்சாவூர் சாஸ்த்ரா நிகர்நிலை பல்கலைக்கழகத்தினரால், நித்ய வேதபாராயணம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. விழா ஏற்பாடுகளை கோயில் ஸ்ரீகாரியம் சுந்தரேசன், கோயில் செயல் அலுவலர் சீனிவாசன், கோயில் மணியம் சூரியநாராயணன் ஆகியோர் தலைமையில் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

The post காஞ்சிபுரத்தில் வரும் 14ம் தேதி முதல் 26ம் தேதி வரை காமாட்சியம்மன் கோயில் நவராத்திரி உற்சவ விழா: 22ம் தேதி சூரசம்ஹாரம் appeared first on Dinakaran.

Tags : Kamatshyamman Temple Navratri Utsava Festival ,Kanchipuram ,Surasamharam ,Kamatshyamman Temple Navratri Utsava ,
× RELATED காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில்...